Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,கிராம அளவில் சிறப்பு முகாம்கள்நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

வருவாய் துறை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில்,‘‘அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இந்த அரசின்கொள்கையின் ஓர் அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022-ம் ஆண்டு பொங்கலுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்’’ என்றார்.

இதையடுத்து, நில அளவைத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 1991 முதல் 2002 வரை கிராமங்களில் உள்ள நிலம் தொடர்பான ‘அ பதிவேடு’, சிட்டா ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு, கணினிவழி பட்டா ‘தமிழ்நிலம்’ மென்பொருள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுகணினிவழி பட்டா தொடர்பாக நிலஉரிமையாளர்களால் அதிக அளவில் புகார்கள் தரப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, பட்டா தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்புமுகாம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை:

அரசின் திட்டங்கள் பொதுமக்களின் வீட்டுக்கே சென்று சேரும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. பட்டாவில் உள்ள தவறுகளை சரிசெய்து, நில உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே இதன் நோக்கம்.

புதன், வெள்ளிகளில்..

சிறப்பு முகாம்களை வாரத்தில்புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தி மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வருவாய், நில அளவைத் துறை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

சிறிய அளவிலான தவறுகள் இருப்பின் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, சர்வேஎண் அல்லது உட்பிரிவு எண், நிலஅளவு, பட்டாதாரர், அவரது தந்தைஅல்லது காப்பாளர் பெயர், உறவுமுறை குழப்பம், நில உரிமையாளர் பெயர், நிலம் அமைந்துள்ள இடத்தின் பெயரில் குழப்பம் ஏற்பட்டிருந்தால் மாற்றலாம்.

‘அ பதிவேடு’ அல்லது நில உரிமையாளர் அளிக்கும் இதர ஆவணங்களை ஆய்வு செய்து, சிறு தவறுகளை அந்த நாளே நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஒருவேளை முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு, சான்றிதழ்கள், குடிநீர் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகமனு அளித்தால், அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, தனியான பதிவேட்டில் பதிந்து புகார்தாரர்களுக்கு உரிய உறுதிச் சான்று வழங்கப்பட வேண்டும்.

முகாம் அட்டவணையை மாவட்ட ஆட்சியர்கள் தயார் செய்யவேண்டும். வருவாய் கோட்டாட் சியர், வட்டாட்சியர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி, வாரத்தில் 2 கிராமங்கள் வீதம் சிறப்பு முகாமுக்கான பட்டியலை தயாரிக்க வேண்டும். முகாம்களை ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x