

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. அவருக்குதொடர்பு உடையதாக கூறப்படும் நபரின் சென்னை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் 2016 - 2021 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.23 கோடி சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை ஊழல்தடுப்பு, கண்காணிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட மொத்தம் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 18-ம்தேதி சோதனை நடத்தினர். முடிவில் ரூ.23.86 லட்சம் மதிப்புள்ள 4.87 கிலோ தங்கம், 136கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், சொத்து பரிவரித்தனை தொடர்புடைய ஆவணங்கள் கண்டறியப்பட்டு, 19 ஹார்டு டிஸ்க், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் விஜயபாஸ்கரிடமும் நேரடி விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் நண்பர் சந்திரசேகரின் அலுவலகத்துக்கு லஞ்சஒழிப்பு போலீஸார் சென்றபோது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அவர் வெளியூர் சென்றுவிட்டதால், அலுவலகத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. வேறொரு நாளில் சீலை திறந்து சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விஜயபாஸ்கர்தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர். தேவைப்பட்டால் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் மேலும் சிலரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்படும் என்றும் கூறினர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு தொடர்புடைய 26 இடங்களில் கடந்த ஜூலை 22-ம்தேதி சோதனை நடத்தினர்.
வழக்கு விசாரணைக்காக சென்னை ஆலந்தூரில் உள்ளலஞ்ச ஒழிப்பு துறை தலைமைஅலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ஆஜராகுமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் மீண்டும் நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர்.