Last Updated : 20 Oct, 2021 03:08 AM

 

Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

நடப்பு ஆண்டில் ரூ.1,500 கோடி பட்டாசு உற்பத்தி சரிவு; வழக்குகளால் தத்தளிக்கும் தொழில்: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கலக்கம்

கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளால் ஏற்பட்ட நெருக்கடியில் பட்டாசுத் தொழில் தத்தளித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்களான காகித ஆலைகள், அச்சுத் தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.

இதன்மூலம் ஆண்டுக்கு சுமார்ரூ.6 ஆயிரம் கோடி பட்டாசு உற்பத்தி நடக்கிறது. ஆனாலும் உச்ச நீதிமன்ற வழக்கு, நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை உள்ளிட்டவற்றால், 6 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழில் சரிவை சந்தித்து வருகிறது.

இதனால் பட்டாசு மட்டுமின்றி அத்தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுவரும் 1.50 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிவகாசியில் பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும்நிலையிலும், பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டதால், இத்தொழில் நம்பகத்தன்மை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதோடு, மொத்த வியாபாரிகளிடம் வட மாநிலங்களில் ஏற்கெனவே வாங்கியுள்ள பட்டாசுகள் விற்க முடியாமல் இருப்பு உள்ளதால், இந்த ஆண்டு வடமாநிலங்களில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர் இல்லை. இதனால் சுமார் 30 சதவீத பட்டாசு உற்பத்தி குறைந்து ரூ.1,500 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் கூறியதாவது: தமிழகத்தைவிட வட மாநிலங்களில்தான் பட்டாசு பயன்பாடு அதிகம். ஆனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி 7 மாநிலங்களில் உள்ள தடை காரணமாக இத்தொழில் நசிந்து வருகிறது.

மேலும், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பட்டாசுக்கான தடை நீக்கப்பட்டாலும், மொத்த விற்பனைக்கு மட்டுமேஅனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.சில்லரை விற்பனை அனுமதிக்கப்படவில்லை.

பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தியே 60 சதவீத பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசுகளில் ஒளி எழுப்ப இது அவசியம். தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, நீரியின் வழிகாட்டுதல்படி அனுமதிபெற்று பசுமை பட்டாசுகள் மட்டுமே 100 சதவீதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், தீங்கு விளைவிக்கும் புகை வெளிப்படுவதில்லை.

மேலும், பசுமை பட்டாசுகளை வெடிக்கும்போது ஒரு சில மணி நேரத்தில் புகை கலைந்துவிடும் என்பதால் மாசு ஏற்படாது. பட்டாசு உற்பத்தித் தொழிலைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய விழாக்களை கொண்டாடும்போது கட்டுப்பாடுகள் இல்லை என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பட்டாசுத் தொழிலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x