

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய விளைவான மிஸ்ஸி நோயால் பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டின். இவரது மனைவி ஜெனிபர். இவர்களின் 9 வயது மகள் மெர்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென்று மயங்கி விழுந்த சிறுமி மெர்சி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் சிறுமிக்கு கரோனாவுக்கு பிந்தைய விளைவான ‘மிஸ்ஸி’ - Multisystem inflammatory syndrome in children (MIS-C) நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை என முடிவு வந்தது. பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கண்காணிக்கும் பரிசோதனையை செய்தபோது, கரோனா தொற்று பாதிப்பு வந்து சென்றிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனை இயக்குநர் எழிலரசி மேற்பார்வையில், தீவிர சிகிச்சைப்பிரிவுத் துறை தலைவர் பூவழகி தலைமையில் மருத்துவர்கள் சீனிவாசன், குமாரவேல், ரமேஷ், கார்த்திக், நிஷா, கோமதி மற்றும் பல்வேறு துறைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிறுமிக்கு அதிக விலை கொண்ட மருந்துகளை கொண்டு தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.
நீண்ட நாட்களாக செயற்கை சுவாசத்தில் இருந்த சிறுமிக்கு ட்ரக்கியோஸ்டோமி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று மாதம் தொடர் சிகிச்சைக்குப் பின்பு பூரணமாக குணமடைந்த சிறுமி நேற்று வீட்டுக்குச் சென்றார்.
இதுதொடர்பாக மருத்துவர் பூவழகியிடம் கேட்டபோது, “சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். பல உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததால் எங்களுடன் பல்வேறு துறைகளின் மருத்துவர்கள் இணைந்து சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர்.
குறிப்பாக இதயம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்களின் மூன்று மாத சிகிச்சைக்குப் பின்பு சிறுமி குணமடைந்துள்ளார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக அளிக்கப்பட்ட இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.30 லட்சத்துக்கும் மேல் செலவாகும்” என்றார்.