

மத்திய அரசின் மேற்படிப்புக்கான உதவித்தொகை பெறும் சிறுபான்மையின மாணவர்களின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தினர், மத ரீதியான சிறுபான்மையினராக வகுக்கப்பட்டுள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, தமிழகத்தில் 11 சதவீதம் சிறுபான்மையினர் உள்ளனர்.
சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பள்ளிப் படிப்பு (1 முதல் 10-ம் வகுப்பு வரை), பள்ளி மேற்படிப்பு (11 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை)மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும், பெற்றோர் அல்லதுபாதுகாவலரின் ஆண்டு வருமானம்பள்ளிப் படிப்புக்கு ரூ.1 லட்சமும்,மேற்படிப்புக்கு ரூ.2 லட்சமும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2020-2021 கல்வியாண்டில் 3 லட்சத்து 75 ஆயிரம்மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்புக்கான உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். 2020-ல் 3.76 லட்சம்,2019-ல் 3.25 லட்சம், 2018-ல் 3.53லட்சம் மாணவர்கள் உதவித்தொகை பெற்றுள்ளனர். ஆனால்,இதில் 10 சதவீதம் பேர்கூட மேற்படிப்புக்கான உதவித்தொகையைப் பெறவில்லை.
அதாவது, 2015-ல் 67 ஆயிரத்து 385 பேர் மேற்படிப்புக்கான உதவித்தொகையைப் பெற்றனர். அதேபோல, 2016-ல் 41,880, 2017-ல் 38,444, 2018-ல் 39,193, 2019-ல்36,628, 2020-ல் 43,241, 2021-ல் 44,209மாணவர்களும் உதவித்தொகை பெற்றுள்ளனர். பள்ளிப் படிப்பைமுடிக்கும் மாணவிகள் பலரும்மேற்படிப்பைத் தொடர முடியவில்லை என்று தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் 2,352 மாணவிகள்மட்டுமே இந்த உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.
அதேபோல, 2015-ல் 32,168 முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்புக்கான உதவித்தொகை பெற்ற நிலையில், 2021-ல் 20,587 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். இவ்வாறு சிறுபான்மையின மாணவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெறுவது குறைந்து வருகிறது.
இதுகுறித்து சிறுபான்மையினர் நலத் துறை அதிகாரிகள் கூறும்போது, "மத்திய அரசின் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து, விரிவாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்,பெண் பேதமின்றி கல்வி மேம்பாட்டுக்கு அனைத்து சிறுபான்மையின மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் முன்னேற முடியும்.
மேலும், மத்திய அரசின் உதவித்தொகையைப் பெற முடியாத, தகுதியுள்ள மாணவர்களுக்கு, மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழக சிறுபான்மையினர் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உதவித்தொகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது" என்றனர்.