

மனிதர்களுக்கு இன்றியமையாத கல்வி, சுகாதாரத்தை ஸ்ரீ நாராயணி பீடம் சேவையாக செய்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வித்யா நேத்ரம் திட்டத்தில் 400 மாணவ, மாணவிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஸ்ரீ சக்தி அம்மா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிப் பேசும்போது, ‘‘மனிதர்களுக்கு கல்வி, சுகாதாரம் இன்றியமையாதது. அந்த இரண்டையும் நாராயணி பீடம் சேவையாக செய்து வருகிறது. உதவிகள் செய்வது நமக்கு கிடைத்த வாய்ப்பு. அதனை மனிதர்களாக பிறந்த அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய நாராயணி பீடம் பல்வேறு உதவிகள் செய்து வருவது நாட்டுக்கே பெருமை’’ என்றார்.
முன்னதாக, ஸ்ரீ சக்தி அம்மாபேசும்போது, ‘‘கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகள், ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு பிறகு உடனுக்குடன் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
ராஜா என்றால் மகிழ்ச்சியாக இருப்பவர் என்பது மட்டுமல்ல மக்கள் குறைகளையும் தீர்க்கக் கூடியவர்தான் ராஜா. அந்தவகையில், தற்போதைய தமிழக அரசு மக்கள் குறைகளை தீர்க்கும் அரசாக திகழ்கிறது’’ என்றார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.