

புதுச்சேரியில் இருவர் கரோனாவுக்கு பலியானார்கள். புதிதாக 55 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10. 82 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
புதுவையில் நேற்று 4 ஆயிரத்து 217 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புதிதாக 55 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனைகளில் 94 பேரும், வீடுகளில் 396 பேரும் என புதுவை மாநிலத்தில் இப்போது 490 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவையில் 55, காரைக்காலில் 17, ஏனாமில் 3, மாகேவில் 11 பேர் என 86 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த 83 வயது முதியவர், சாணரப்பேட்டையை சேர்ந்த 60 வயது ஆண் என 2 பேர் சிகிச்சை பலனின்றி கரோனாவால் இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி போட்டுள்ளோர் விவரம்:
புதுச்சேரி முழுக்க சுமார் 7 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் ஆக இதுவரை புதுச்சேரியில் 10 லட்சத்து 82 ஆயிரத்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.