

கூவம் ஆற்றில் கடந்த 26 ஆண்டுகளாக மாசு ஏற்படுத்திய எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கூவம் ஆற்றை சீரமைக்கக்கோரி எட்வின் வில்சன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த அமர்வு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூவம் ஆறு முழுவதும் ஆய்வு செய்து, ஆற்றை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யாஸ்மின் அலி தாக்கல் செய்த அறிக்கையில், கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் குழும கல்வி நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி பெற மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கவில்லை. அவை கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை கடந்த 26 ஆண்டுகளாக கூவம் ஆற்றில் விட்டு வருகின்றன. மேலும் கூவம் ஆற்றில் கழிவுநீரை விட்டு வந்த 11 தனியார் நிறுவனங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் குழும கல்வி நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை இரு வாரங்களில், கூவம் ஆறு புனரமைப்பு அறக்கட்டளையிடம் செலுத்த வேண்டும். அவற்றின் மீது குற்ற நடவடிக்கை மற்றும் மூடும் நடவடிக்கைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுக்க வேண்டும். உரிய அனுமதி இன்றி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் கூவம் ஆற்றில் மாசு ஏற்படுத்தி வரும் நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை மே 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.