ஜாக்டோ - ஜியோ சார்பில் நடத்தப்பட்ட அரசு ஊழியர் போராட்ட காலம் பணிக்காலமாக அறிவிப்பு: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு

ஜாக்டோ - ஜியோ சார்பில் நடத்தப்பட்ட அரசு ஊழியர் போராட்ட காலம் பணிக்காலமாக அறிவிப்பு: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு
Updated on
1 min read

ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த2016-2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணை:

கடந்த 2016-2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சில அரசு பணியாளர்,மற்றும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்ட காலங்களுக்கு, பணிபுரியவில்லை என்றால்ஊதியமில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும் குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்நிலையில், அரசு பணியாளர்களின் போராட்ட காலத்தை முறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்டார்.

அதற்கு இணங்க பின்வரும் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

* 2016-2017 மற்றும் 2019 ஆண்டுகளில் நடந்த அரசு பணியாளர்கள்,ஆசிரியர்களின் வேலைநிறுத்தபோராட்ட காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது.

* வேலைநிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிக பணிநீக்க காலமும் பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது.

* போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.

* ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக பதவி உயர்வு பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வின்போது அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in