Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு; சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் குவிந்தனர்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து புதுக்கோட்டை உட்பட தமிழகம் முழுவதும் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் திரண்டு போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அவரது வீட்டில் குவிந்தனர்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2021 வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர்மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அவரது அலுவலகம், மேட்டுசாலையில் உள்ள தனியார் கல்லூரிகள், திருவேங்கைவாசல் மற்றும் முத்துடையான்பட்டியில் உள்ள கல் குவாரிகள், மதர்தெரசா அறக்கட்டளை அலுவலகம் மற்றும் ஆதரவாளர்களான இலுப்பூர் பாண்டிசெல்வம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் குரு.ராஜமன்னார், அன்னவாசல் ஒன்றியக் குழுத்தலைவர் வி.ராமசாமி, புதுக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் க.பாஸ்கர், இவரது சகோதரர் பாபு, அரசு ஒப்பந்ததாரர் சோத்துப்பாளை முருகேசன், உதவியாளர் அன்பானந்தம், முன்னாள் நகராட்சிதுணைத் தலைவர் சேட் என்ற அப்துல்ரகுமான், மெய்யனம்பட்டி வடிவேல், சிப்காட் பழனிசாமி, இலுப்பூர் சுப்பையா, குபேந்திரன், ஆலங்குடி குரு.தனசேகரனின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடைபெற்றபோது, இலுப்பூரில் விஜயபாஸ்கரின் வீடு முன்பு அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டனர். சோதனைக்குஇடையூறாக இருப்பதாகக் கூறிகட்சியினரை வெளியேற்றியபோது, போலீஸாருக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சி கிராப்பட்டி காந்தி நகரில் வசிக்கும் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான குருபாபு (எ) ராஜமன்னார் வீடு, எடமலைப்பட்டிபுதூர் நியூ பாப்பா காலனியில் உள்ள சிவா ரைஸ் மில் நிர்வாகி சுதாகர் வீடு ஆகிய இடங்களில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் தனித்தனி குழுக்களாகச் சென்று சோதனை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் ஈசிஆர் சாலையில் விஜயபாஸ்கரின்‌ சகோதரி தனலட்சுமியின் வீடு, பல் மருத்துவமனையில் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ராமநாதபுரம் சிக்னல் சந்திப்பு நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி கார்டனில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் என்பவரது வீடு உள்ளது. அதேபோல் அவிநாசி சாலை பீளமேட்டில் தனியார் கல்லூரி எதிரே உள்ள பன்னடுக்கு வணிக வளாக கட்டிடத்தில், விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், இரு இடங்களிலும் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னையில் 7 இடங்கள்

சென்னையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் விஜய்சாந்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு, தியாகராய நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீடு, நுங்கம்பாக்கம் எலைட் எம்பயரில் சின்னத்தம்பி பெயரில் உள்ள வீடு, நந்தனம் சேமியர்ஸ் சாலை ராகா குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் வீடு, மற்றொரு உதவியாளர் சீனிவாசனின் வளசரவாக்கம் பெத்தானிய நகர் வீடு, மந்தைவெளி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வாரி ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம், பெசன்ட் நகரில் உள்ள அன்யா என்டெர்பிரைசஸ் ஆகிய 7 இடங்களில் சோதனை நடந்தது.

விஜயபாஸ்கரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 58 கோடியே 64 லட்சத்து 25,887 ரூபாய். இதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலீஸார் விசாரணை

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் விஜயபாஸ்கர் இருந்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடப்பதை அறிந்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், முன்னாள் மேயர் பாலகங்கா அதிமுக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் அங்கு வந்தனர்.

‘திமுக அரசின் பழிவாங்கும் உணர்ச்சி’

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுகஅரசு தனது பழிவாங்கும் உணர்ச்சியை மீண்டும் பகிரங்கப்படுத்தியுள்ளது. அதிமுக பொன்விழா கொண்டாடப்படும் எழுச்சிமிகு தருணத்திலும், 17-ம் தேதி நடைபெற்ற உற்சாகமான விழாவைக் கண்டு, மனம் பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன் காவல் துறை மூலம் லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பானது. கட்சி நிர்வாகிகள் மீது என்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், எதிர்காலத்தில் அதிமுக பெறப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x