

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயித்து வருகின்றன. சமீபகாலமாக இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
தேனி மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.95-க்கும், டீசல்விலை ரூ.100.05-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுவரை பெட்ரோல் மட்டுமே ரூ.100-ஐ கடந்தநிலையில் டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்திருப்பது இலகு மற்றும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பெரியகுளம் தாலுகா வடகரையில் உள்ள ஜே.சி.பெட்ரோல் பங்க் முன்பு, லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கேக் வெட்டி வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, “ஏற்கெனவே லாரி தொழில் தடுமாற்றத்தில் உள்ளது. இந்நிலையில் டீசல் விலைதொடர்ந்து உயர்வது எங்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். வாடகை அதிகரித்து, பொருட்களின் விலையும் உயரும் என்பதால், பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே, எங்கள் கஷ்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தும் நோக்கில் கேக் வெட்டி உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளோம்” என்றனர்.
சங்கத் தலைவர் நிஜாத் ரஹ்மான், செயலாளர் குணசேகரன், பொருளாளர் தங்கமணி துணைத் தலைவர் ரசூத், இணைச்செயலாளர் போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.