

தேசிய கட்சிகளின் சின்னங்களை வேறு கட்சிகளுக்கு ஒதுக்குவதில்லை என்று முன்பு தேர்தல் ஆணையம் விதிமுறை வைத்திருந்தது. 2013-ல், பிராந்திய கட்சிகளின் சின்னங்களும் பிற மாநில கட்சிகளுக்கு ஒதுக்கப்படாது என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும் சமாஜ்வாதி, தெலுங்கு தேசம் கட்சிகள் சைக்கிள் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் தமாகா மனு செய்தது. ஆனால், அவர்களுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதுகுறித்து தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனிடம் கேட்டபோது, ‘‘ஒரு கட்சி 6 ஆண்டுகளாக தனது சின்னத்தை இழந்திருந்தாலும் அதை மீண்டும் கேட்டுப் பெறலாம் என்றும் தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது. இதை வைத்து நீதிமன்றத்துக்கு போகலாம். ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டதால் அதற்கான அவகாசம் இல்லை. எனவே, தேர்தல் ஆணையத்திடமே மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். தமிழகத்தில் தமாகா தவிர வேறெந்த கட்சியும் சைக்கிள் சின்னத்தை இதுவரை பயன்படுத்தவில்லை என்பதால் எங்களுக்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் இம்முறை தமாகா வேறு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டி இருக்கும்’’ என்றார்.