

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் டிசம்பருக்குள் நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரத்தில், இந்த அமைப்புகளின் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாக தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கான வயது வரம்பை அரசு நீக்க வேண்டும்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இம்மாதம் 30-ம் தேதியன்று சைக்கிள் பேரணி நடத்தப்படும்.
மின் தட்டுப்பாடு ஏற்படும் முன்பாக, மாநிலங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்க வேண்டும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அதிமுக ஆட்சியிலேயே குற்றச்சாட்டுகள் வந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் ஏராளமான தவறுகள் செய்துள்ளனர். இவை குறித்து தற்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.