

சென்னை மாநகராட்சி பூங்காக்களை முறையாகப் பராமரிக்காவிட்டால், தொடர்புடைய தனியார் பராமரிப்பு நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகரின் சுற்றுச்சூழலைப் பேணிகாக்கவும், மக்களின் பொழுதுபோக்குக்காகவும் 704 பூங்காக்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. பராமரிப்புப் பணிகளுக்காக இவற்றில் 540 பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புற்களை வெட்டிப் பராமரித்தல், தேவையான நேரத்தில் களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாகப் பராமரித்தல், புதிய செடிகளை நட்டுப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களைத் தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவுவாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்களைக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், பூங்காக்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக மாநகராட்சி, பூங்காத் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 31 முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை நடத்திய களஆய்வில், சரிவர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் பராமரிப்புப் பணியில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
குடியிருப்பு நலச் சங்கங்கள், தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை கண்காணித்து, அவற்றில் உள்ள குறைகள் மற்றும் புகார்கள் குறித்து மண்டல அலுவலகம், வட்டார துணை ஆணையர் அலுவலகம் அல்லது தலைமையிடத்தில் உள்ள 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.