நகை கடை உரிமையாளர்களின் போராட்டம்: 7-ம் தேதி வரை நீட்டிப்பு- ரூ.1,050 கோடி வர்த்தகம் பாதிப்பு

நகை கடை உரிமையாளர்களின் போராட்டம்: 7-ம் தேதி வரை நீட்டிப்பு- ரூ.1,050 கோடி வர்த்தகம் பாதிப்பு
Updated on
1 min read

தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் நகை கடை உரிமையாளர்கள் நடத்திவரும் கடை யடைப்பு போராட்டம் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி கடந்த 3 நாட்களாக நகைக்கடை உரிமையாளர்கள் நாடுமுழுவதும் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் நகைக் கடைகள் மூடப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 35 ஆயிரம் நகைக் கடைகள் மூடப்பட்டன. இதனால் நகை வாங்குவோர், மாதாந்திர நகை சீட்டு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

ஆலோசனை கூட்டம்

இந்நிலையில் சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சேத்துப்பட்டில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் தற்போது நடந்து வரும் கடையடைப்பு போராட்டத்தை 7-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை வாபஸ் பெற கோரி கடந்த 3 நாட்களாக நாடுமுழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தினோம். மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. கடந்த 3 நாட்கள் நடந்த போராட்டத்தால் எங்களுக்கு ரூ.1050 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுக்கு செல்ல வேண்டிய 10 சதவீத சுங்கவரி வருவாய், 1 சதவீத வாட் வரி மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எங்கள் போராட்டத்தை வரும் 7-ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்துள் ளோம். அதன்படி, தொடர்ந்து கடைகள் அடைக்கப்படும். நகை தொழிலை சார்ந்துள்ள லட்சக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in