

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவ. 29-ம்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சேவியர் பெலிக்ஸ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான 83.26 ஏக்கர் நிலத்தில், 21 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள மீதமுள்ள 62 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ‘‘இந்தக் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எந்த அடிப்படையில் கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன என்பது பற்றியும் 6 வாரங்களில் தமிழக அரசுஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை நவ.29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அத்துடன், இதுதொடர்பாக முறையான அறிக்கை தாக்கல் செய்ய வசதியாக, நிலத்தை அளவீடு செய்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.