

மணல், எம்-சாண்ட், கருங்கல் ஜல்லி இல்லாமல் கட்டுமானத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் கருங்கல் ஜல்லிக் குவாரிகளை இயக்க வேண்டும் என்றுதமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பால் கடந்த 18 மாதங்களாக கட்டுமானத் தொழில்கள் பெரிதும் முடங்கியுள்ளன. இதனால் சுமார் 50 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொழிலுக்கு உறுதுணையாக, மணல், கருங்கல் ஜல்லி, சிமென்ட், எம்-சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 75 ஆயிரம் லாரிகள் தற்போது இயங்காத காரணத்தால், அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், கருங்கல் ஜல்லிக்குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் என சுமார் 5 லட்சம்பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கருங்கல் ஜல்லி, எம்-சாண்ட் குவாரிகள் இயங்காத காரணத்தால், கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமான கட்டுமானத் தொழில்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 17 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டுமானப் பணிகள், எண்ணூர் துறைமுக கட்டுமானப் பணிகள், தனியார் நிறுவன கட்டுமானப் பணிகள், மக்கள் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பிளான்ட் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் கிடைக்காமல், கட்டிடத் தொழில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுமானத் தொழிலாளர்கள் சுமார் 50 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகியிருக்கிறது.
எனவே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக முதல்வர் உரிய உத்தரவு பிறப்பித்து, கருங்கல் ஜல்லிக் குவாரிகளை இயக்கத் நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும். அதன்மூலம், லாரி உரிமையாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.