

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதால் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாமகவில் மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு கடந்த ஜனவரியிலேயே விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பிப்ரவரி தொடக்கத்தில் நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டது. பாமக மாநில மாநாடு முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் தேர்தல் அறிக்கை மற்றும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
மாநாடு முடிந்து ஒருவாரம் ஆன பிறகும் தேர்தல் அறிக்கையோ, வேட்பாளர் பட்டியலைலோ இதுவரை வெளியிடவில்லை. இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘பாஜக உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுடனும் ஒரு சில கட்சிகள் பேசி வருகின்றனர். இந்த நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டால் சரியானதாக இருக்காது. அதனால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்” என்றனர்.