Published : 19 Oct 2021 03:08 AM
Last Updated : 19 Oct 2021 03:08 AM

புதுச்சேரியில் ‘இந்து தமிழ் திசை’யின் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கல்; கரோனா தடுப்பூசி போட மறுப்பது மன்னிக்க முடியாத குற்றம்: மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

பள்ளி மாணவர்கள், பெற்றோர் இடையே சுகாதார விழிப்புணர்வைக் கொண்டு வரும் வகையில், சுத்தம் சுகாதாரம் இணைய வழி தொடர் விழிப்புணர்வு நிகழ்வை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தனர். உடன் ‘இந்து தமிழ் திசை’ வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்ரமணியன், கலெக்டிவ் குட் பவுண்டேசன் மூத்த ஆலோசகர் வைத்தியநாதன் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ விற்பனைப் பிரிவு பொது மேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர்.படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

கரோனா தடுப்பூசி போட மறுப்பது மன்னிக்க முடியாத குற்றம்; மற்றவர்களுக்கு தொற்றை பரப்ப யாருக்கும் உரிமையில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுப்பில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கும் விழா மற்றும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி தொடர் விழிப்புணர்வு நிகழ்வின் தொடக்க விழா புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ்திசை’யுடன் புதுச்சேரி அரசு,இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (புதுச்சேரி), டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, கலெக்ட்டிவ் குட் பவுன்டேசன், அவ்வை சொசைட்டி மற்றும் தி ரெசிடென்சி டவர்ஸ் ஆகியவை இணைந்து நடத்தின.

இவ்விருதுக்காக புதுச்சேரி மாநிலத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் 15 மருத்துவர்களை இந்தியன் மெடிக்கல் அசோசி யேஷன் (புதுச்சேரி) தேர்வு செய்தது. அவர்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது:

‘இந்து தமிழ் திசை’யின் சிறப்பான இந்நிகழ்வுக்கு ‘தமிழ் இசை’ (தமிழிசை) வராவிட்டால் எப்படி? ஆளுநரும், முதல்வரும் இணைந்து வந்துள்ளதை இங்கு குறிப்பிட்டனர். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் ஆளுநரும், முதல்வரும் எப்போதும் இணைந்தே வருவார்கள். அதில், எந்த பிரச்சினையும் கிடையாது.

கரோனா நெருக்கடி காலத்தில் மருத்துவர்களின் சிறந்த பங்களிப்போடு புதுச்சேரியின் சுகாதாரத் துறை சிறப்பான முறையில் பங்காற்றியிருக்கிறது. ஆக்ஸிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை எதுவும் ஏற்படாமல் எடுத்துச் சென்றிருக்கிறோம். உபரியாக 30 சத ஆக்ஸிஜனை தமிழகத்துக்கு அளித்துள்ளோம்.

அந்த தருணத்தில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து சென்றவர்களில் 35 சதவீத நோயாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். நெருக்கடி நேரத்தில் தமிழகத்தின் சகோதர மாநிலமாக புதுச்சேரி செயல்பட்டது.

இனிமேலும் இழக்க வேண்டாம்

கரோனா நெருக்கடியில் பல மணி நேரம் தூங்காமல், ஓய்வின்றி, தூக்கம் தொலைத்து மருத்துவர்கள் பணியாற்றினர். இந்த கரோனா நெருக்கடியில் இந்தியாவில் 1,342 மருத்துவர்களையும், உலகம்முழுவதிலும் 1.15 லட்சம் மருத்துவர்களையும் நாம் இழந்துள்ளோம். இனிமேலும் மருத்துவர்களை நாம் இழக்கத் தயாராக இல்லை. அதனால் தடுப்பூசி செலுத்துங்கள் என்று கேட்கிறோம்.

‘தடுப்பூசி வேண்டாம்’ எனச்சொல்ல எங்களுக்கு உரிமையுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், மற்றவர்களுக்கு தொற்றை பரப்ப உங்களுக்கு உரிமையில்லை. தடுப்பூசி போட மறுத்து தொற்றை பரப்புவது மன்னிக்க முடியாத குற்றம்.

நற்பெயரை சம்பாதித்தோம்

கரோனா நெருக்கடியில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதை விமர்சனம் செய்தார்கள். ஒரு மருத்துவராக ஒரு மருந்தின் வாழ்நாள் காலத்தை நான் அறிவேன். அந்த நேரத்தில் அவற்றை நாம் அவர்களுக்கு வழங்காமல் விட்டிருந்தால் அவை வீணாகியிருக்கும். 95 நாடுகளுக்கு வழங்கி நற்பெயரை இந்தியா பெற்றுள்ளது.

‘தற்போது தான் கரோனா இல்லையே! ஏன் தடுப்பூசி போட வேண்டும்’ என்று கேட்கிறார்கள். தடுப்பூசியால் தான் 3- வது அலையை தொடாமல் இருக்கிறோம். தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், தொடர்ந்து 2 வயது முதல் 8 வயதுகுட்பட்ட சிறார்களுக்கு தயாரித்துள்ளனர். அவர்களின் வீட்டுக்கு விஜயதசமி நாளில் சென்று நன்றி தெரிவித்தேன். இது இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டாலும் முகக்கவசம் அணிவது அவசியம்.

‘இந்து தமிழ் திசை’யின் சமூக அக்கறை : முதல்வர் ரங்கசாமி பாராட்டு

இந்நிகழ்வில் மருத்துவர்களை வாழ்த்திப் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு உயிரிழப்புகளை சந்தித்திருக்கிறோம். நாம் அனைவரும் அச்சப்படுகின்ற நோயாக கரோனா தொற்று இருந்தது.

பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள் விரும்பி வந்து சேவை புரிந்தது உண்மையில் பாராட்டக்கூடியதாகும். கரோனா தொற்று பரவும்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லையென்றால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருப்போம். இதை அனைவரும் குறிப்பிடுகின்றனர். இதுபோல இன்னும் புதிய மருத்துவமனைகளை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணமும் அரசிடம் இருக்கிறது.

இதுபோல் விருது வழங்குவது சிறந்த மருத்துவச் சேவையில் ஈடுபடுவோரை உற்சாகப்படுத்தும். இந்த விருது அனைவருக்குமானது. அதிலிருந்து 15 பேரை தேர்ந்தெடுத்து இந்த விருதை நாம் வழங்குகிறோம். அதுபோல் சுத்தம் சுகாதாரம் என்ற இணையவழி தொடர் விழிப்புணர்வு தொடங்குவதும் பாராட்டுக்குரியது.

கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு, பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நம் பிரதமர் எடுத்துக்கொண்ட முயற்சி அனைவராலும் பாராட்டக் கூடிய ஒன்று. நான் அடிக்கடி அதை நினைத்துக் கொள்வேன்.

நம் துணைநிலை ஆளுநர் மருத்துவராக இருப்பதால் சுகாதார விஷயங்களில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறார். 100 சத தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும் என்பது ஆளுநரின் எண்ணம்; அவரது எண்ணம் நிறைவேறும்.

‘இந்து’ நாளிதழ் என்று சொன்னாலே உண்மை செய்திகள் இருக்கும். அக்குழுமத்தில் தமிழில் வரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வந்து மக்களிடம் சிறப்பானச் செய்திகளை கொண்டு சேர்ப்பது பாராட்டுக்குரியது. அந்நிறுவனத்தினர் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை இந்த விழா மூலம் புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.

விருது பெற்ற மருத்துவர்கள்

‘இந்து தமிழ் திசை’ வழங்கிய ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகளைப் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த மருத்துவர்கள் விஜயகுமார், விஜயசங்கர், வெங்கடேஷ், விவேகானந்தன், ராக், அனுஷா செரியன், ரஞ்சன், நாயர் இக்பால், கவிதா, பாலசுப்ரமணியன், பிரதீபா, மேனகா கார்மேகம், தரணி, சண்முகவள்ளி, பிரவீன் ராதாகிருஷ்ணன் ஆகிய 15 மருத்துவர்கள் பெற்றனர். கரோனா நெருக்கடியில் மருத்துவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பட்ட சிரமங்களுக்கு அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கவே பாராட்டு தெரிவிக்கிறோம். அவர்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ விருது தந்துள்ளது பாராட்டுக்குரியது.

தொடர் முயற்சியால்தான் புதுச்சேரியில் இயல்பு நிலை திரும்பியது. அதன் மூலமே விநாயகர் சதுர்த்தி, தசராவை சிறப்பாகக் கொண்டாடினோம். அரசின் சிறப்பான நிர்வாக செயல்பாடே இதற்கு காரணம். தயவு செய்து தடுப்பூசி போடுங்கள். வெகுவிரைவில் புதுச்சேரி 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாறும் என்று தெரிவித்தார்.

அனைவருக்கும் சமர்ப்பணம்

இந்நிகழ்வில் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் பேசுகையில் ‘‘நமது நாளிதழ் தொடங்கப்பட்டு 9-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சமூகத் துக்கு ஏற்றம் தரக்கூடிய பயனுள்ள விஷயங்களை தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’யின் வாயிலாக செய்து வருகிறோம்.

சென்னையில் மருத்துவ நட்சத்திரங்கள் விருதினை சிறப்பாக நடத்தினோம். புதுச்சேரியிலும் இந்நிகழ்வை நடத்துவது பெருமையாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது.

இங்கு விருது வாங்குபவர்கள் மட்டும் ‘மருத்துவ நட்சத்திரங்கள்’ அல்ல. அனைத்து மருத்துவர்களின் பிரதிநிதிகளாகவே இங்கு சிலர் விருது வாங்க வந்துள்ளனர். மருத்துவர்கள் பலர் உயிரை தியாகம் செய்துள்ளனர். தங்களைப்பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் வருகின்றனர். அந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இந்த விருதுகள் சமர்ப்பணம்.

எளிமை, சகோதரத்துடன் திகழும் ஆளுநர் தமிழிசையோடு சேர்ந்து இந்நிகழ்வை நடத்தும்போது இதனுடைய பெருமை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக கருதுகிறேன். முதல்வர் ரங்கசாமி எளிமையின் அடையாளம். பல வேலை பளு இருந்தாலும் ஆளுநருடன் சேர்ந்து வந்து இந்நிகழ்வில் பங்கேற்றிருப்பது தனிச்சிறப்பு” என்றார்.

யூ டியூப் வழியே விழிப்புணர்வு

இந்நிகழ்வில் பேசிய கலெக்ட் டிவ் குட் பவுன்டேசன் மூத்த ஆலோசகர் வைத்தியநாதன், “புதுச்சேரி மாநிலம் முழுவதும் 3 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கும் தூய்மை, சுகாதாரம் தொடர்பாக ஆன்லைன் வழியே யூடியூப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

பிரபலமான பேச்சாளர்கள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் மூலமாக இதைக் கொண்டு செல் வோம். இதற்காக 33 வீடியோக்கள் தயாரித்துள்ளோம், மேலும் 3 கையேடுகள் தர உள்ளோம்.முதலில் யூடியூப் கல்வி நிகழ்வை புதுச்சேரியில் தொடங்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

நிகழ்வில் பேசிய இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கான புதுச்சேரி தலைவர் டாக்டர் சீனிவாசன், “கரோனா தருணத்தில் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறந்த சேவையாற்றியது. பல மருத்துவர்கள் தாமாக முன்வந்து கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினர்.

மருத்துவர்களின் சிறப்பான பணியால் தற்போது பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 24 ஆக குறைந்துள்ளது. 4 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைவசதிகள் தற்போது உள்ளது. கரோனாவை எதிர்கொள்ள தேவையான சாதனங்கள் உள்ளன” என்றார்.

இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு. முருகேசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் புதுவை கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி செயலர் சுதாகர், நேஷனல் மெடிக்கல் கமிஷன் உறுப்பினர் விஜய் ஓசா, அவ்வை சொசைட்டி செயலர் கிருஷ்ணகுமார், தி ரெசிடென்சி டவர் பொதுமேலாளர் அமர்நாத் மற்றும் ‘இந்து தமிழ் திசை’யின் வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்ரமணியன், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x