

கும்பகோணம் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பெண்ணை அடித்துக் கொன்று புதைத்ததாக, அந்தப் பெண்ணின் தோழி, தோழியின் கணவர் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி அனிதா(30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. டேவிட் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி திருப்பனந்தாளில் உள்ள வங்கிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அனிதாவின் செல்போன் ஐஎம்இஐ எண்ணைப் பயன்படுத்தி விசாரணை நடத்தியதில், எதிர்வீட்டில் வசித்து வரும் கார்த்திக்(31) என்பவர், அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக அழைத்துப் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திக்கை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அனிதா கொலை செய்யப்பட்டு, சோழபுரத்தில் உள்ள கருவேலங்காட்டில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினரின் முன்னிலையில் நேற்று அனிதாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
கொலை செய்யப்பட்ட அனிதாவும், கார்த்திக்கின் மனைவி சத்யாவும்(28) பள்ளிப் பருவத் தோழிகள். பின்னர், இருவரும் ஒரே ஊரில் திருணம் செய்துகொடுக்கப்பட்டதால், தங்களின் நட்பை தொடர்ந்து வந்துள்ளனர். சத்யாவின் வீட்டுக்கு அனிதா அடிக்கடி சென்றுவந்த நிலையில், அனிதாவிடம் இருந்து சத்யா, கார்த்திக் ஆகியோர் பல லட்ச ரூபாய் மற்றும் 10 பவுன் நகைகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது கணவர் வெளிநாட்டிலிருந்து ஓரிரு மாதங்களில் திரும்பி வரப்போகிறார் என்றுகூறி சத்யா, கார்த்திக்கிடம் தனது பணம், நகையை அனிதா திருப்பிக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, கடந்த 12-ம் தேதி பணம் தருவதாகக் கூறி அனிதாவை தங்களின் வீட்டுக்கு கார்த்திக் வரவழைத்துள்ளார். அங்கு கார்த்திக், சத்யா மற்றும் கார்த்திக்கின் தந்தை ரங்கநாதன்(60), சத்யாவின் சகோதரர் சரவணன்(30) ஆகியோர் சேர்ந்து, அனிதாவை அடித்துக் கொலை செய்து, அவரது சடலத்தை சோழபுரத்தில் உள்ள கருவேலங்காட்டில் புதைத்துவிட்டனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், சத்யா, ரங்கநாதன், சரவணன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.