Published : 18 Oct 2021 06:15 PM
Last Updated : 18 Oct 2021 06:15 PM

கல்விக் கடனுக்கான சிறப்பு முகாம்; 28 வங்கிகள் பங்கேற்பு: மாணவர்களுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அழைப்பு

மதுரையில் வரும் 20 ஆம் தேதி (அக்டோபர் 20) கல்விக் கடனுக்காக 29 வங்கிகள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் உயர்கல்வி பெறுவது நின்றுவிடக்கூடாது.

அதற்காக இந்த கல்வியாண்டில் மதுரை மாவட்ட மாணவர்களுக்கு 500 கோடி ரூபாய் கல்விக்கடனை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை துவக்கினோம்.

மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் , வங்கித்துறை அதிகாரிகள் & கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்போடு கடந்த 2 மாதங்களாக இப்பெரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை மூன்று முறை இதற்கான கூட்டங்களை நடத்தியுள்ளோம். சுமார் 55 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் ஏராளமான மாணவர்களுக்கு தடையில்லாமல் கல்விக்கடன் கிடைத்திட தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் 12 தேசிய வங்கிகள் , 16 தனியார் வங்கிகள் உள்ளிட்டு 28 வங்கிகள் பங்கேற்கின்றன.

இன்னும் கல்விக்கடன் கிடைக்கப்பெறாத, கடன் தேவைப்படுகிற மாணவர்கள் இம்முகாமினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x