Last Updated : 18 Oct, 2021 05:18 PM

 

Published : 18 Oct 2021 05:18 PM
Last Updated : 18 Oct 2021 05:18 PM

கோவையில் விஜயபாஸ்கரின் மாமனார் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் மாலை வரை ரெய்டு

கோவை நஞ்சுண்டாபுரம் சாலையிலுள்ள, எஸ்.என்.வி கார்டனில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் இன்று சோதனை நடத்திய  லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் | படம் : ஜெ.மனோகரன்.

கோவை

கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மாமனார் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீதும், இவரது மனைவி மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், இன்று (18-ம் தேதி) சென்னை, கோவை, புதுக்கோட்டை என மாநிலம் முழுவதும் உள்ள 43-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதன்படி, கோவையில் இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் சோதனை நடந்தது.

கோவை ராமநாதபுரம் சிக்னல் சந்திப்பில் இருந்து, நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி. கார்டனில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் என்பவரின் வீடு உள்ளது. அதேபோல், அவிநாசி சாலை, பீளமேட்டில் தனியார் கல்லூரி எதிரேயுள்ள பன்னடுக்கு வணிக வளாகக் கட்டிடத்தில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரின் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது.

கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், இரு வேறு குழுக்களாகப் பிரிந்து, நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி கார்டன் சாலையில் உள்ள அவரது மாமனார் சுந்தரம் வீடு, பீளமேட்டிலுள்ள பன்னடுக்கு வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்தின் அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று காலை 6.30 மணிக்கு சோதனையைத் தொடங்கினர்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும், வெளியே நிறுத்தப்பட்டு இருந்த கார் உள்ளிட்ட வாகனங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முழுமையாக சோதனை நடத்தினர். மாலை வரை இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் மேற்கண்ட இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கவும், உறுதிப்படுத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x