

தமிழகத்தில் இதுவரை முதல் தவணை கரோனா தடுப்பூசியை 67 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளதாகவும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 25 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’இன்று 53 லட்சத்து 64 ஆயிரத்து 679 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. செவ்வாய் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்துவதற்கு மருத்துவத் துறையின் சார்பில் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின்படி இதுவரை நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் மூலம் பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
கடந்த 5-வது மெகா தடுப்பூசி முகாமில் 11 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 4-வது மாபெரும் தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த வாரம் நடைபெறும் 6-வது மாபெரும் தடுப்பூசி முகாமில் 30 லட்சத்து 42 ஆயிரத்து 509 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.
இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 67 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசியை 25 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளனர். இந்த மருத்துவ முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 84 நாட்கள் கழிந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியையும், 28 நாட்கள் இடைவெளியில் கோவாக்சின் தடுப்பூசியையும் 50 ஆயிரம் மருத்துவ முகாம்கள் மூலம் தங்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது.
50 ஆயிரம் முகாம்களும், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு முகாம்கள் நடைபெற உள்ளன என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் தலைமைச் செயலாளரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவிக்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள 12,500 ஊராட்சித் தலைவர்களுக்கும், தமிழக முதல்வர் கடிதம் எழுத இருக்கிறார். அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவிகிதம் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்கு ஊராட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த உள்ளார்’’.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.