

கரூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரூர் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை தொடக்க விழா கரூர் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று (அக். 18) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் குத்துவிளக்கேற்றி, தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
படுக்கை விரிப்பு ஒன்றைப் பார்வையிட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், நன்றாக இருப்பதாகக் கூறி அதற்கான தொகையைச் செலுத்தி வாங்கிக்கொண்டார்.
கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அ.கோபால், கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி பட்டுப் புடவைகள், மென்பட்டுப் புடவைகள், கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி, சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரகப் பருத்தி (காட்டன்) புடவைகள், ஆர்கானிக், கலம்கரி பருத்திப் புடவைகள், நேர்த்தியான வண்ணங்களில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு உள்ளது.
இவற்றுடன் ஏற்றுமதி ரக ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், டேபிள் மேட், திரைச்சீலைகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும்.