

நாகஸ்வரமும், தவிலும் ராஜ இசைக் கருவிகள். இவை இரண்டுமே தமிழ்நாட்டுக் கோயில்களில் முதன்மையாக இசைக்கப்படுபவை. மங்கல இசைக் கருவிகளான இவை, கோயிலில் பூஜைக்காலங்களில் வாசிக்கப்படுவதற்கான விதிகள், முறைகளை இக்கலைஞர்கள் பாரம்பரியமாகவும், குருகுல முறையிலும் பயின்று பணிபுரிகின்றனர். கோயில்களின் பூஜைக் காலங்களுக்கு ஏற்ற வகையிலும், காலத்துக்கு ஏற்றவாறும் ராகங்களையும், அந்த ராகங்களில்அமைந்த கீதம், வர்ணம், கீர்த்தனைமுதலிய உருப்படிகளையும், தேவாரம், திருப்புகழ், திவ்ய பிரபந்தங்களையும் செவிக்கு இனிமையாகவாசிப்பார்கள். இன்று இந்த இசைக்கலைஞர்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் ஒரு குருவிடம் அல்லது பல குருக்களிடம் இக்கலைகளை முழுநேர படிப்பாகப் பயின்று வருகின்றனர். ஆனால், இந்த இசைக் கலைஞர்களுக்கு பள்ளிக்கல்வித் தகுதியை அரசு நிர்ணயித்து, அங்கீகரித்துள்ள கல்வித் தகுதி சான்றை பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குருகுல முறைமூலமாக கற்று மங்கல இசைக் கருவிகளை செம்மையாக இசைப்பதையே கல்வித் தகுதியாகக் கருத வேண்டும்.
இந்த கலைஞர்களில் பெரும்பாலோருக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லை. எனவே, பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித்தகுதியை சிறப்பு விதிகளின்படிநீக்கி, அவர்களது வாசிப்புத்திறமைக்குரிய தேர்வினை, தகுந்தஇசைக் கலைஞர்களைக் கொண்டுநடத்தி, கோயில்கள், பிற இடங்களில் பணியமர்த்த அரசு ஆவனசெய்ய வேண்டும். இக்கலைஞர்களுக்கு பள்ளிக்கல்வித் தகுதி நிர்ணயத்தை நீக்க வேண்டும்.
அதேபோல, இசைக் கலைஞர்களின் மேற்படிப்புக்கு வழிவகை இல்லாத நிலை உள்ளது. இந்த நிலை மாற, சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வியல் நிறைஞர்படிப்பு, முனைவர் பட்டப் படிப்பு போன்றவை கிடைக்க வழிசெய்து இவர்களது கல்வித் தகுதி மேம்பட உதவலாம். இதற்கான வழிகள்:
1. இசைக் கல்லூரிகளில் மாலைநேரக் கல்வி மூலமாக சான்றிதழ் பட்டய வகுப்புகள் நடத்தலாம்.
2. இசைப் பல்கலைக்கழகங்களில் தனித்தேர்வர் (பிரைவேட் ஸ்டடீஸ்) முறை மூலமாக முதுகலைப் பட்டப் படிப்பு வழங்கலாம்.
3. பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முறை மூலமாக சான்றிதழ், பட்டயம், பட்டப் படிப்புகள் வழங்கலாம்.
மற்ற மாநில பாடத்திட்டப்படி பள்ளிக்கல்வி முடித்தவர்கள் இந்தபடிப்புகளில் சேரவும் வழிவகை செய்ய வேண்டும். மேற்கண்ட மாற்றங்களை அரசு செய்தால் நாகஸ்வரம், தவில் கலைஞர்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும்.
(கட்டுரையாளர்: சென்னை பொருளியற் பள்ளி நூலகர்)