Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

சசிகலா கணக்கு கேட்கமாட்டார்; அதிமுகவினர் பயப்பட வேண்டாம்: பெங்களூரு புகழேந்தி விமர்சனம்

சசிகலா கணக்கு கேட்கமாட்டார்; அதிமுகவினர் பயப்படவேண்டாம் என்று அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக பொன்விழாவை யொட்டி, அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு வா.புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன், புகழேந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறியதாவது: சசிகலாவின் அரசியல் பிரவேசத்தைப் பார்த்து பயப்பட வேண்டாம். நான்கு ஆண்டுகள் கொள்ளையடித்த கணக்குகளை அவர் நிச்சயமாக கேட்க மாட்டார். கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லைஎன்ற தைரியத்துடன் சசிகலாவை ஏற்றுக் கொள்ளலாம். உங்களை கணக்கு கேட்டு சிறைக்கு அனுப்ப வேண்டியவர், முதல்வர் ஸ்டாலினும், தமிழக அரசும்தான்.

ஒற்றுமையாகவும், அனைவரையும் அரவணைத்தும் சென்றால் கட்சி காப்பாற்றப்படும். திமுகவையும் எதிர்கொள்ள முடியும்.

இதற்கு ஒரே வழி, பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதுதான்.

தலைமைக் கழகத்துக்கு சசிகலா வந்து விடுவாரோ என்ற பயம் தேவைதானா? கட்சியினரை சசிகலா விமர்சிக்காத நிலையில், பயந்து நடுங்குவது ஏன்?

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதம் திமுக வெற்றி பெற்ற செய்தியை சொல்வதற்காகவா எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு வந்தீர்கள்? ஒற்றுமையோடு இருந்து, கட்சியை சரிவர வழிநடத்த ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவரை ஓரம் கட்டக்கூடாது. இவ்வாறு புகழேந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x