

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளகோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகைகளைஉருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றவும், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து அதன்மூலம் வரும் வருவாயை கோயில் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில்களில் இதுவரை காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களை அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகள் இதுவரை உருக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு உருக்கப்பட்டிருந்தால் எந்த வருடம், எந்த தேதியில் உருக்கப்பட்டது, தங்க கட்டிகள் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதா, திருப்பணிக்காக தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதா, கோயிலின் கட்டுப்பட்டில் தங்கக் கட்டிகள் ஏதாவது உள்ளதாஎன்பன உள்ளிட்ட விவரங்களை படிவத்தில் நிரப்பி உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் எனஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களும், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.