போலி பான் கார்டுகள், லைசென்ஸ் தயாரித்து கடைகளில் மோசடி செய்த 5 பேர் கைது

போலி பான் கார்டுகள், லைசென்ஸ் தயாரித்து கடைகளில் மோசடி செய்த  5  பேர் கைது
Updated on
1 min read

போலி பான் கார்டுகள், ஓட்டுநர் உரிமங்கள் தயாரித்து மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலை ரஹேஜா டவரில் பஜாஜ் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிறுவனம் சார்பில் செல்போன் விற்பனை நிலையங்களில் கிளைகள் அமைக்கப்பட்டு, வட்டியில்லா மாத தவணை முறையில், செல்போன் வாங்க கடன் வழங்கப்படுகிறது.

கடந்த 14-ம் தேதி ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள செல்போன் கடைக்கு ரஞ்சித்(23), சிவநேசன்(25) ஆகியோர் வந்து வட்டியில்லா மாத தவணை முறையில் ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் செல்போன் வாங்கினர். இதற்காக அவர்களின் சம்பள சான்றிதழ், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் தனியார் வங்கியின் காசோலை ஆகியவற்றை கொடுத்து, செல்போனை வாங்கிச் சென்றனர்.

அவர்கள் கொடுத்த சான்றிதழ்களை பஜாஜ் நிதி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் போலியானவை என்பது தெரிந்தது. இதுகுறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்தின் துணை மேலாளர் தங்கராஜ்(31) கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், புதுக்கோட்டையை சேர்ந்த பாரதிதாசன்(27), ஓட்டேரியை சேர்ந்த ரஞ்சித்(23), அம்பத்தூர் விஜய்துரை(37), சூளைமேடு வெங்கடேசன்(32), தாம்பரம் ஜெகதீஷ்பாபு(35) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 பான் கார்டுகள், 8 ஓட்டுநர் உரிமங்கள், ஒரு லேமினேஷன் கருவி, லேப்டாப், ஆப்பிள் ஐ போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வெங்கடேசன், ஜெகதீஷ்பாபு ஆகிய இருவரும் ராயப்பேட்டையில் ஒரு அச்சகத்தில் வேலை பார்க்கின்றனர். பாரதிதாசன், ரஞ்சித் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து பான் கார்டுகள், ஓட்டுநர் உரிமங்கள், சம்பள சான்றிதழ்கள் போன்றவற்றை போலியாக தயாரித்து பல்வேறு கடைகளில் லட்சக்கணக்கில் பொருட்களை கடனுக்கு வாங்கி, ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிந்தது.

கைதான 5 பேரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர். சிவனேசன், விஜய்துரை ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in