50 ஆண்டுகளில் முதல் பெண் தலைவரை எதிர்நோக்கும் புனித தோமையார் மலை ஒன்றியம்

50 ஆண்டுகளில் முதல் பெண் தலைவரை எதிர்நோக்கும் புனித தோமையார் மலை ஒன்றியம்
Updated on
1 min read

தமிழக உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றிய தலைவர் பதவி, கடந்த 1961 முதல் 2011-ம் ஆண்டு வரை, 50 ஆண்டுகளாக பொதுப்பிரிவில் இருந்து வந்தது.

தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய தலைவர் பதவி, பெண்ணுக்கு குறிப்பாக ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்சிக்காரரா? சுயேச்சையா?

புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 11 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் 9 இடங்களில் திமுகவும், ஓர் இடத்தில் அதிமுகவும், ஓர் இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒன்றிய தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு இந்த சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெற்றி பெற்றுள்ளர். ஒருவர் திமுக சார்பிலும் மற்றொருவர் சுயேச்சையாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் திமுக சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இங்கு சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளரும் திமுகவைச் சார்ந்தவர். திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவரும் திமுக உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறார்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:

புனித தோமையார் மலை ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் முன்பு 56 கிராம ஊராட்சிகள் இருந்தன. இதில் பெரும்பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டதால், தற்போது 15 ஊராட்சிகளே எஞ்சி உள்ளன. விரைவில் அவையும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளன.

தற்போது முதல்முறையாக ஆதிதிராவிட இன பெண்ணுக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யார் இந்தப் பதவியை அலங்கரிப்பார்கள் என மக்கள் காத்திருக்கின்றனர். யார் அலங்கரித்தாலும் வரலாற்றில் இடம்பெறுவது நிச்சயம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in