மாற்று வழியில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்துக: ஜி.கே.வாசன்

மாற்று வழியில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்துக: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

விவசாய நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் மாற்று வழியில் கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டது. விளை நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களில், விளை நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் நெடுஞ்சாலைகள் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால், இந்தக் கோரிக்கையை கெயில் நிறுவனம் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றமும் கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு விளை நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் மாற்று வழியில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in