

இராக்கில் உள்நாட்டு போர் நடைபெறும் பகுதியில், தூத்துக்குடியை சேர்ந்த செவிலியர் சிக்கியுள்ளார். அவரை பத்திரமாக மீட்க அரசுக்கு, குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி கால்டுவெல் காலனி 5-வது தெருவை சேர்ந்த பிரான்சி லோபஸ் என்பவரின் மகள் லெசிமா ஜெரோஸ் மோனிஷா (25). செவிலியரான இவர், திக்ரித் பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். லெசிமாவின் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டார். அவரது தாய் பி.எட்விஜம்மாள், சகோதரி ரெய்சா ஆகியோர் லெசிமாவை மீட்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களது மனுவை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், மேல் நடவடிக்கைக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். லெசிமாவை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக அரசு சார்பில் லெசிமாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்விஜம்மாள் கூறியதாவது:
எனது இரண்டாவது மகள் லெசிமா. அவர் இராக், திக்ரித் பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால், பிப்ரவரி 17-ம் தேதி அங்கு சென்றார்.
திக்ரித் நகரம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து, 46 இந்திய செவிலி யர்களும் மருத்துவமனையில் சிக்கியுள்ளனர். செவிலியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், சாப்பாடு, தண்ணீர் தடையின்றி கிடைப்பதாகவும் அவர் தொலைபேசியில் கூறினார். அவரை பத்திரமாக மீட்டு விரைவில் ஊருக்கு அனுப்ப தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.