கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை உருக்கக்கூடாது: இந்து முன்னணி யாத்திரை

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து செல்லியம்மன் கோயில் வரை பிரச்சார யாத்திரை தொடங்கிய இந்து முன்னணியினர்.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து செல்லியம்மன் கோயில் வரை பிரச்சார யாத்திரை தொடங்கிய இந்து முன்னணியினர்.
Updated on
2 min read

கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை உருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வேலூரில் இந்து முன்னணி சார்பில் யாத்திரை தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார். இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்து பிரச்சார யாத்திரை தொடங்கி வைத்தார்.

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற இந்து முன்னணியினர் செல்லியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:

''கடவுள் நம்பிக்கை இல்லாத இந்து அரசு கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நேற்று சென்னையிலும், இன்று வேலூரிலும் பிரச்சார யாத்திரை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து முன்னணி சார்பில் பிரச்சார யாத்திரை நடத்தப்படும்.

பக்தர்கள் கோயில்களுக்கு காணிக்கையாகவும், வேண்டுதலுக்காக தங்கம், வைரம், வைடூரியம், முத்து என விலை மதிப்பில்லாத நகைகளை வழங்கியுள்ளனர். இதை உருக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. கடந்த 2015-ம் ஆண்டில் கோயில்களில் உள்ள நகைகள் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான பதில் அரசிடம் இல்லை.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி இந்து அறநிலையத்துறை ஆணையர் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள நகைகள் குறித்த கணக்கை அறிக்கையாக ஒரே நாளில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடுகிறார். ஏறத்தாழ 60 ஆண்டுகளாக நகைகள் குறித்த கணக்கு இல்லாத போது, ஒரே நாளில் நகைகள் குறித்த கணக்கை எப்படி தாக்கல் செய்ய முடியும். நகைகளை உருக்கும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?


வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து செல்லியம்மன் கோயில் வரை பிரச்சார யாத்திரை தொடங்கிய இந்து முன்னணியினர், செல்லியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் நகைகள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில கோயில்களில் ஊழல் நடந்துள்ளது. அதேபோல, தற்போது நகைகளை உருக்கும் திட்டத்தில் பல ஊழல்கள் நடக்க வாய்ப்புள்ளது. நகைகளை உருக்கி அதை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அப்படி என்றால் எந்த வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கான வட்டி விகிதம் என்ன? அந்த வட்டித் தொகை எதற்காக செலவிடப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

பங்களாதேஷ் நாட்டில் துர்கா பூஜையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் நடத்தியதில் 10 இந்துக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் உயிரிழந்தால் பலர் முன்வந்து குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் ருத்ராட்சிரம் அணிந்து வந்ததால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

பங்களாதேஷ் பயங்கரவாதிகள் தமிழகத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊடுருவி உள்ளனர். இதைக் கண்காணித்து தமிழக அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தாவிட்டால் பெரிய சதிச்செயல் தமிழகத்தில் நிகழ வாய்ப்புள்ளது. வேலூரில் இந்துக்கள் மதம் மாற்றப்படுகின்றனர். இந்து முன்னணி கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தார், காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.

கோயில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் வரும் 26-ம் தேதி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.''

இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in