வீதியில் வீசப்பட்ட பணம்: ஊராட்சித் துணைத் தலைவருக்கான பேரத்தால் பரபரப்பு

வீதியில் வீசப்பட்ட பணம்: ஊராட்சித் துணைத் தலைவருக்கான பேரத்தால் பரபரப்பு
Updated on
1 min read

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், ஊராட்சித் துணைத் தலைவருக்கான போட்டியில், வெற்றிபெற்ற ஊராட்சி உறுப்பினர்கள் போட்டிபோட்டுக் களமிறங்கி உள்ளனர். ஊராட்சிகளில் துணைத் தலைவர் தேர்தலுக்கான போட்டி அதிகரித்ததன் விளைவாக வெற்றிபெற்ற உறுப்பினர்களை இழுக்க இலைமறை காயாக இருந்த பேரங்கள், தற்போது வெளிப்படையாக அரங்கேறத் தொடங்கியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவராக கலியமூர்த்தி வெற்றிபெற்றார். 9 வார்டுகளைக் கொண்ட இந்த ஊராட்சியில் துணைத் தலைவருக்கான போட்டியில் ஆறுமுகம் மற்றும் சந்திரபாபு ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

எனவே இதில் ஒருவர் தன்னைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சக உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். போட்டி பலமானதால், இவரும் எதையாவது கொடுத்து பதவியைப் பிடித்துவிடவேண்டும் என்ற ஆசையில், செலவுகளை தாராளமாக்கியுள்ளனர்.

அந்த வகையில் சக போட்டியாளரிடம் ஒரு உறுப்பினர் கை நீட்டி வாங்கியதை அறிந்த மற்றொரு போட்டியாளர், கை நீட்டி வாங்கியவரிடம் இரு இடங்களில் கை நீட்டியது ஏன் என மிரட்டல் விடுத்தார். அடுத்த கணமே கை நீட்டிப் பெற்றதை, உரியவரிடமே கொண்டு சேர்க்க முயற்சிக்கிறார் அந்த உறுப்பினர். ஆனால் கொடுத்தவரோ அதைப் பெற மறுத்து, கொடுத்தது கொடுத்ததாக இருக்கட்டும், வேண்டாம் என மறுக்கவே, கை நீட்டி வாங்கியவர் திருப்பி எடுத்துவர மனமின்றி, கொடுத்தவரின் வீட்டு முன்பு வீதியில் வீசியெறிந்துவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அந்தத் தொகை வீதியில் கிடக்க அப்பகுதி மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் யாரிடமும் புகாரும் தெரிவிக்க முன்வரவில்லை.

ஊராட்சி துணைத் தலைவருக்கே இந்த நிலை என்றால், அடுத்து அரங்கேறவுள்ள ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்டத் தலைவர் பதவிகளுக்கு என்ன நடக்கும்? அதேபோன்று பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களில் நிலை என்னவாகும்? என்பதே சாமானியர்களின் கேள்வியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in