Last Updated : 17 Oct, 2021 07:11 PM

 

Published : 17 Oct 2021 07:11 PM
Last Updated : 17 Oct 2021 07:11 PM

உபயோகித்த சமையல் எண்ணெயில் பயோடீசல்: கின்னஸ் சாதனைக்கு கோவை உணவுப் பாதுகாப்புத்துறை முயற்சி

சித்திரிப்புப் படம்.

கோவை

உபயோகித்த சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோடீசல் தயாரிப்பதற்கான திட்டத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: உணவகங்கள், ஹோட்டல்கள், இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், தொழிற்சாலை கேன்டீன்களில் உணவுப்பொருட்களை தயாரிக்கும்போது சில இடங்களில் சமையல் எண்ணெய்யை பலமுறை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதனால், உணவு செரிமான தன்மை குறைவு, கெட்ட கொழுப்பு, குடல் பாதிப்புகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, உபயோகித்த சமையல் எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத்துறையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்று மறுசுழற்சி செய்து பயோடீசல் தயாரிப்பதற்கான திட்டம் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாதனை நிகழ்த்த கின்னஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பம்

இத்திட்டத்தின்மூலம் இதுவரை, 315 உணவு வணிக நிறுவனங்களில் இருந்து, 32 டன் உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பெறப்பட்டு, பயோடீசல் தயாரிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் நவம்பர் மாதத்தில் அதிகப்படியான உபயோகித்த சமையல் எண்ணெய்யை திரட்டி, அதனை பயோடீசல் தயாரிக்க வழங்க உள்ளோம். இது இந்தியாவிலேயே முதல் முயற்சி ஆகும். இதற்குமுன், கடந்த 2019-ம் ஆண்டில் பிரேசில் நகரத்தில் ஒரே மாதத்தில் 50,501 லிட்டர் உபயோகித்த சமையல் எண்ணெய் திரட்டப்பட்டு மறுசுழற்சி செய்வதற்காக வழங்கப்பட்டது உலக சாதனை நிகழ்வாக சான்றளிக்கப்பட்டுள்ளது. அதனை முறியடிக்கும் வகையில் கின்னஸ் உலக சாதனை வலைதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உபரி உணவு சேகரிப்பு திட்டம்

உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டம், 'நோ ஃபுட் வேஸ்ட்' என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 459 அழைப்புகள் வந்ததன்மூலம் உணவு சேகரிக்கப்பட்டு, 8.83 லட்சம் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருமண விழாக்கள் உள்ளிட்ட வீட்டு விசேஷங்கள், பொது நிகழ்வுகளில் கைபடாத உணவு உபரியாக இருப்பின் 90877 90877 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x