

அடுத்து வரும் நகர்ப்புறத் தேர்தலை நேர்மையாக நடத்தினால் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுகவினர், மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி இன்று கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகர அதிமுக சார்பில் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலத்தில் அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார்.
பிறகு அங்கு கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:
நாடு முழுவதும் அதிமுக பொன்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து வேறு கட்சிகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்புகின்றனர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம், எம்ஜிஆர் நினைவிடத்துக்குச் சென்றது பெரிய விஷயமே இல்லை. அதை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதிமுகவில் எப்போதும் சசிகலாவுக்கு இடமில்லை என்பது உறுதியான முடிவாகும். அதிமுகவை வழிநடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரான தேர்தலாகும். ஆளும் கட்சி பல சூழ்ச்சிகளைச் செய்து வெற்றிபெற்றுள்ளது. இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்.
பல இடங்களில் வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டு திமுகவினர் வாக்குப்பெட்டிகளையே மாற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆதாரங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. எனவே, அடுத்த வரக்கூடிய நகர்ப்புறத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவால் அதிமுக சோர்வடையவில்லை. எப்போதும் போல் நாங்கள் உற்சாகத்துடன்தான் இருக்கிறோம். இதை இந்த பொன்விழா ஆண்டுக் கொண்டாடத்தில் எல்லோரும் பார்க்கலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்றுதான். அடுத்த வரும் நகர்ப்புறத் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது.’’
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.