

பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அரைமணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் மாயனூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (35). இவர் மனைவி கோமதி (32). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஹஸ்வந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக கோமதி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோமதி வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த கோமதியின் சடலத்தை உறவினர்கள் வந்து பார்த்தபோது கோமதியின் கணவர் மற்றும் குழந்தை ல்லை. கோமதி சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது குழந்தையை மீட்டுத் தரவேண்டும் என்றும் கணவர் சத்தியராஜைக் கைது செய்ய வலியுறுத்தியும் அதுவரை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறி இன்று (அக். 17ம் தேதி) உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த கரூர் டிஎஸ்பி தேவராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏடிஎஸ்பி கண்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போலீஸாருக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய போலீஸார் வாகனத்தை வரவழைத்தபோது மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து ஓடினர். இதையடுத்து கோமதியின் குழந்தை அழைத்து வரப்பட்டு, பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அவர்கள் சம்மதித்ததை அடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மறியலால் கரூர், திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.