

தீபாவளியையொட்டி அரசு விரைவு பேருந்துகளில் பயணம்செய்ய இதுவரை 20 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவ.1-ம் தேதி முதல்3-ம் தேதி வரை தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்துசென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, அரசு விரைவுப் பேருந்துகளில் பொதுமக்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தொற்று குறைந்துள்ளதால்...
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பாதிப்புகுறைந்துள்ளதால், இந்த ஆண்டுதீபாவளிக்கு அதிகளவு மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்கு ஏற்றார்போல், ஏற்கெனவே அறிவித்ததுபோல் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தயாராகி வருகிறோம். நீண்டதூரம் செல்லும் மக்கள், அரசு விரைவு சொகுசு, ஏசி, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் பிற தனியார் இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
12 மையங்களில் முன்பதிவு
அதன்படி, இதுவரை 20 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேட்டில் 10, தாம்பரம் சானடோரியத்தில் 2 என 12 முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. டிக்கெட் முன்பதிவு இன்னும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.