Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை; திருக்குறுங்குடியில் பாலம் மூழ்கியதால் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்: ஆட்சியர், எஸ்பி நடவடிக்கையால் பத்திரமாக மீட்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் நம்பியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால், திருமலை நம்பி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பலமணி நேர போராட்டத்துக்குப் பின்பு மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நல்ல மழை பெய்தது. திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலுக்கு, சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து அல்லது ஜீப்பில் கோயிலுக்கு செல்ல வேண்டும். கரோனா கட்டுப்பாட்டில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்ததைஅடுத்து, நேற்று இக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் நம்பி கோயிலுக்கு சென்றனர்.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை 11 மணியளவில் காட்டாற்று வெள்ளத்தால் மலை நம்பி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கீழே வரமுடியாமல் மலையில் சிக்கித் தவித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எஸ்பி மணிவண்ணன், நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி உள்ளிட்டோர் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். நாங்குநேரி தீயணைப்பு படையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று தரைப்பாலத்தில் கயிறு கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்டனர். மாலை 5 மணி வரை மீட்பு பணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட 25 ஆயிரம் கனஅடி தண்ணீரால் கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரள்கிறது. பழையாறு, வள்ளியாறு மற்றும் கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டதால், கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x