Published : 07 Mar 2016 09:29 AM
Last Updated : 07 Mar 2016 09:29 AM

ஆட்சி முடியும் நேரத்தில் திட்டங்களை தொடங்குவதும், அறிவிப்பதும் ஏமாற்று வேலை: திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

ஆட்சி முடியும் நேரத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்குவதும், அறிவிப்பதும் மக்களை ஏமாற்றும் வேலை என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் அதற்குள் தன் நினைவுக்கு வந்த திட்டங்களுக்கெல்லாம் முதல்வர் ஜெயலலிதா அன்றாடம் அடிக்கல் நாட்டியிருக்கிறார். கடந்த மாதம் 20-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கப்பட்டு பேரவை முடிவுற்றது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 4 நாட்கள் மட்டுமே நடந்தபோது, ஒவ்வொரு நாளும் முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல 110-வது விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிப்பது தொடர்ந்தது.

கடந்த மாதம் 27-ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ரூ.120 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கும், ரூ.626 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டிலான பொதுப்பணித் துறையின் திட்டங்களுக்கும் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் - உப்பூரில் ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள அனல் மின் திட்டத்துக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆனால், உப்பூர் மின் நிலையம், கடந்த 2011-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆட்சி அமைந்த தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருக்கிறார். கடந்த 1-ம் தேதியன்று ரூ.1,354 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பாலங்கள் மற்றும் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுபோல் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ளார்.

5 நாளில் ரூ.15 ஆயிரம் கோடி

அதிமுக அரசின் பதவிக்காலம் முடியும் நிலையில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு அறிவிப்பு களையும் திட்டப் பணிகளையும் அவசர அவசரமாகத் தொடங்கி யும், திறந்து வைத்தும் இருக்கிறார். 5 நாட்களில் முதல்வர் ஜெயலலிதா ரூ.15 ஆயிரத்து 192 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்தத் திட்டங்கள் எல்லாம் எப்போது நடைமுறைக்கு வரும்? இதற்கான தொகை நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதா? மக்களை ஏமாற்றுவதற்காக போகிற போக்கில் அறிவிக்கப்பட்ட திட்டங்களா?

தமிழ்நாட்டில் பெரிய மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தோடி பல நூறு பேர் உயிரிழந்தனர். பல லட்சம் குடும்பங்கள் உடைமைகளை இழந்தன. அதற்கான நிவாரணத் தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எல்லாத் திசைகளிலிருந்தும் வருகிறது.

நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற நேரம் இல்லாத பல்வேறு அறிவிப்புகளையும் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக ஜெயலலிதா கடைசி நேரத்தில் செய்திருக்கிறார். தேர்தல் பணிகளில் முதலில் ஆற்ற வேண்டிய பணி, மக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்துவது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x