

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது பணிகளை டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த 14-ம் தேதி பணியில் இருந்தபோது நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அவருக்குஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்னையின் காவல் ஆணையர் பொறுப்பு முக்கியமானதாக உள்ளதால், அதை தற்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை காவல் ஆணையரகத்தில் மேற்கொள்ளப்படும் அன்றாடப் பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபுவிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சங்கர்ஜிவால் மீண்டும் பணிக்கு திரும்பும்வரை டிஜிபி சைலேந்திரபாபு பணிகளை மேற்பார்வை செய்து கவனிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்துஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.