

காஞ்சிபுரம் நகரம் கடந்த 1921-ம் ஆண்டு நகராட்சிஅந்தஸ்து பெற்று 40 வார்டுகளுடன் செயல்பட்டு வந்தது. நகரில் கடந்த 1975-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக நத்தப்பேட்டை ஊராட்சியின் திருக்காலிமேடு கிராமப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நகருக்குஅருகில் உள்ள நத்தப்பேட்டை, திருக்காலிமேடு, தேனம்பாக்கம் ஊராட்சிகள் மற்றும் செவிலிமேடு பேரூராட்சி ஆகியவை நகராட்சியுடன் இணைக்கப்பட்டு 51 வார்டுகளுடன் கூடிய பெருநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ளகுடியிருப்பு பகுதிகளில் குப்பை சேகரிப்பு உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக வரியினங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டு வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும், நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால், 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால், இந்த பகுதிகளின் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
இதற்கிடையே, புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.303 கோடியில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என நகராட்சி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, திருக்காலிமேடு பகுதிவாழ் மக்கள் கூறியதாவது: நகரின் ஒட்டு மொத்தகழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் சுத்திகரிப்பு நிலையம் திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ளது. ஆனால், பாதாள சாக்கடை திட்டத்துக்கு நிலம் வழங்கிய திருக்காலிமேடு கிராம மக்களின் குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை. கடந்த பலஆண்டாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: காஞ்சிபுரம் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசுமாநகராட்சி அந்தஸ்து வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் அம்ரூட் மற்றும் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.