

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு எழுதியுள்ள கடிதம் தேர்தலுக்காக முதல்வர் ஜெயலலிதா நடத்தும் நாடகம் என்று தமிழக காங்கி ரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
2014-ல் இந்த 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்ச நீதிமன்றம், ஆயுள் தண்டனை பெற்றவர்களை மாநில அரசு விரும் பினால் விடுதலை செய்யலாம் என தீர்ப்பளித்தது. பிறகு இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றமே இடைக்கால தடை விதித்தது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, 7 பேரையும் 3 நாட்களுக்குள் விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்பது தெளிவாக தெரிந்திருந்தும் கடிதம் எழுவது அரசியல் ஏமாற்று வேலையாகும்.
தந்தையை பார்க்க நளினிக்கு பரோல் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெயலலிதா. நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனயை ஆயுள் தண்டனையாக குறைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பரிந்துரைத்தார். அந்த நேரத்தில் ராமேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘‘ராஜீவ் கொலை தேசிய பிரச்சினை. இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இதில் சோனியா காந்தி தலையிடக் கூடாது’’ என விமர்சனம் செய்ததை யாரும் மறக்க முடியாது.
ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது.
ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா நடத்தும் நாடகமே மத்திய அரசுக்கு எழுதி யுள்ள இந்தக் கடிதம். இதனை மக்கள் நன்கறிவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.