Published : 18 Jun 2014 11:54 AM
Last Updated : 18 Jun 2014 11:54 AM

மருத்துவப் படிப்பு பொதுப் பிரிவு கவுன்சலிங் தொடங்கியது: தரவரிசைப்படி முதல் 10 பேரில் 9 பேர் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர்

மருத்துவப் படிப்பு பொதுப் பிரிவு கவுன்சலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 9 பேர் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர்.

தமிழகத்தில் மொத்தம் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,023 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 84 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டில் 498 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 900 இடங்கள் உள்ளன.

சிறப்பு பிரிவில் 44 பேர் தேர்வு

இந்நிலையில் 2014-15 கல்வியாண் டிற்கான மருத்துவ கவுன்சலிங் கடந்த ஜூன் 17-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. முதல்நாள் நடைபெற்ற சிறப்புப் பிரிவு கவுன்சலிங்கில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 39 பேர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 3 பேர், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பிரிவில் 2 பேர் என 44 மாணவ, மாணவிகள் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை பெற்றனர். கவுன்சலிங் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,979 இடங்கள் காலியாக இருந்தன.

பொதுப்பிரிவு கலந்தாய்வு

இதைத் தொடர்ந்து பொதுப்பிரிவு கவுன்சலிங் புதன்கிழமை தொடங் கியது. தர வரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் சேருவதற்கான அனுமதி ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் வழங்கினார். இந்த 10 பேரில் 9 பேர் சென்னை மருத்துவக் கல்லூரியையும் (எம்.எம்.சி), ஒருவர் கோவை மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்தனர்.

உதவிக்கு மருத்துவ மாணவர்கள்

பின்னர் இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு பிரிவு கவுன்சலிங்கில் 44 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மீதம் உள்ள 1,979 இடங்களுக்கான கவுன்சலிங் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்த கவுன்சலிங் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும். முதல் நாளில் 600 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கவுன்சலிங்கில் பங்கேற்க வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு குடிநீர், பந்தல், மின் விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உதவி செய்ய இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

ஜூலையில் 2-ம் கட்ட கவுன்சலிங்

தமிழகத்தில் தற்போது 7 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதனால் அக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 498-க்கான கவுன்சலிங் பின்னர் நடத்தப்படும். 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

செப்டம்பர் 1 வரை மாணவர் சேர்க்கை

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை செப்டம்பர் 1-ம் தேதிவரை சேர்க்கலாம். அதனால் மற்ற சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 12-ம் தேதிக்கு மேல் கவுன்சலிங் நடத்தி நிரப்பப்படும் என்றார் அவர்.

போதிய அளவு குடிநீர் வழங்கப்படவில்லை

கவுன்சலிங்கில் பங்கேற்பதற்காக பெற்றோர், மாணவர் என 1000-க்கும் மேற்பட்டோர் காலை 9 மணிக்கே கவுன்சலிங் நடைபெறும் இடத் திற்கு வந்திருந்தனர். அவர்கள் வெளியே அமர இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வெளிப் பகுதியில் 5 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தன. அவை காலை 11 மணிக்குள்ளாகவே தீர்ந்தன. பின்னர் பிற்பகல் 1 மணி வரை கேனில் குடிநீர் நிரப்பப்படவில்லை. இதனால் வந்திருந்தோர் பணம் கொடுத்தே குடிநீரை வாங்கிக் குடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x