Published : 16 Oct 2021 02:58 PM
Last Updated : 16 Oct 2021 02:58 PM

முந்திரி ஆலைத் தொழிலாளி கோவிந்தராசு கொலை; குடும்பத்துக்கு பாமக நிதியுதவி: கல்விச் செலவை ஏற்பதாக அறிவிப்பு

சென்னை

கொலை செய்யப்பட்ட முந்திரி ஆலைத் தொழிலாளி கோவிந்தராசு குடும்பத்திற்கு பாமக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியது. அதேபோல பேரக் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக பாமக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்குச் சொந்தமான டி.ஆர்.வி. காயத்ரி முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த 19-ம் தேதி இரவு கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கோவிந்தராசு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக கோவிந்தராசு கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கோவிந்தராசுவின் மகன் செந்தில் வேல்- அவரது மனைவி வனஜா, கோவிந்தராசுவின் மகள் வளர்மதி - அவரது கணவர் திருமுருகன் ஆகியோர் சென்னையில் அன்புமணி ராமதாஸைச் சந்தித்து தங்களின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்காக பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அன்புமணி ராமதாஸ், பாமக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அத்துடன் கோவிந்தராசுவின் பேரக் குழந்தைகளின் கல்விச் செலவை பாமக ஏற்றுக்கொள்ளும் என்றும் வாக்குறுதி அளித்தார்''.

இவ்வாறு பாமக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x