சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்; அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு: ஜெயக்குமார் விமர்சனம்

ஜெயக்குமார்: கோப்புப்படம்
ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என, ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (அக்.16) எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த தன் இல்லத்திலிருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்டு சசிகலா மெரினா சென்றார். வழிநெடுக அவருடைய ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மெரினாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் சூழ்ந்தனர்.

சிறை செல்லும் முன்பு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா சபதம் செய்தார். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று முதல் முறையாகச் சென்றார். அங்கு கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது. இயற்கையாக இல்லை. ஒரு நாளுக்கு லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடம் செல்கின்றனர். அந்த லட்சக்கணக்கானோரில் இவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதில் பெரிய விசேஷம் கிடையாது. இது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவதில்லை.

யானை பலம் கொண்டது அதிமுக. அத்தகைய பலம் கொண்ட அதிமுகவை ஒரு கொசு தாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்வது நகைச்சுவை. இதனை எள்ளி நகையாடும் வகையில்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.

அக்டோபர் 17-ம் தேதிதான் பொன்விழா. 16-ம் தேதி செல்கிறார். அதுகூடத் தெரியாதா? வேண்டுமென்றே கட்சிக் கொடியை பயன்படுத்தி குழப்பம் விளைவிக்க முயல்கிறார் சசிகலா. அதனைத் தடுத்து, சட்டத்தை நாங்கள் கையிலெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சசிகலாவுக்கு அமமுகவில் ஒரு நல்ல இடம் கொடுக்கலாம். அதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. எங்கள் கட்சியில் அவருக்கு இடம் இல்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in