Published : 16 Oct 2021 11:41 AM
Last Updated : 16 Oct 2021 11:41 AM

அதிமுக கொடி கட்டிய காரில் சென்ற சசிகலா: ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்ற சசிகலா கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். பின்னர், தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்த்திருந்த அவரின் ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சித் தொண்டர்களிடம் செல்போனில் சசிகலா பேசிய ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகின. அதில், அதிமுகவை மீட்டெடுப்பதில் தான் ஈடுபடுவேன் எனத் தொடர்ந்து கூறிவந்தார். அப்படி, சசிகலாவிடம் பேசிவந்த அதிமுக நிர்வாகிகளை அக்கட்சித் தலைமை உடனடியாக நீக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சி பெறவில்லை. மேலும், அதிமுகவின் பொன்விழா ஆண்டு நாளை (அக்.17) கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (அக்.16) எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த தன் இல்லத்திலிருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்டு மெரினா சென்றார். வழிநெடுக அவருடைய ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மெரினாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் சூழ்ந்தனர்.

சிறை செல்லும் முன்பு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா சபதம் செய்தார். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று முதல் முறையாகச் சென்றார். அங்கு கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x