Last Updated : 10 Mar, 2016 04:02 PM

 

Published : 10 Mar 2016 04:02 PM
Last Updated : 10 Mar 2016 04:02 PM

பாளை, அம்பை, வாசுதேவநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிட சாதகமான தொகுதிகளாக பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர் ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்து மாநில தலைமைக்கு தெரிவித்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு, இது குறித்து அந்தந்த மாவட்ட குழுக்களில் கலந்துரையாடி தலைமைக்கு தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர் தொகுதிகளை அக்கட்சி அடையாளம் கண்டுள்ளது.

கடந்த கால தேர்தல்களில் தங்களுக்கு கிடைத்த வாக்குகள், தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதிகள், தொழிலாளர்களுக்கான பல்வேறு இயக்கங்களை நடத்தியுள்ளது போன்ற சாதகமான அம்சங்களை கருத்தில்கொண்டு இத் தொகுதிகளை தேர்வு செய்திருப்பதாக அக் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

1977, 1980-ம் ஆண்டுகளில் அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் 1977, 1980-ம் ஆண்டு தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோல் வாசுதேவநல்லூர் தொகுதியில் ஆர்.கிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார்.

பாளையங்கோட்டை தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வி. பழனி 57,444 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டிபிஎம் மைதீன்கான் 58049 வாக்குகளை பெற்றிருந்தார். 605 வாக்குகள் வித்தியாசத்தில்தான் பழனி தோற்றிருந்தார். இதனால் இத்தொகுதியில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக அக் கட்சியினர் உறுதி தெரிவிக்கிறார்கள்.

அம்பாசமுத்திரம், வாசுதேவ நல்லூர் தொகுதிகளில் தொழிலாளர் கள் அதிகளவில் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு தொழிற்சங்கங்களில் இந்த தொழிலாளர்கள் அங்கம் வகித்திருக்கி றார்கள். இரு தொகுதிகளிலும் விவசாய தொழிலாளர்கள் அதிகமுள்ளனர். இதுபோல் பல்வேறு தொழிலாளர் களுக்கான போராட்டங்களையும் கட்சி முன்னெடுத்து நடத்தியிருப்பதால் அவர்களது ஆதரவு கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்புகிறார்கள். இதுபோன்ற காரணங்களால் 3 தொகுதிகளையும் அடையாளம் கண்டு மாநிலக் குழுவுக்கு, மாவட்டக் குழு அனுப்பியிருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் 4-ம் கட்ட பிரச்சாரத்தை வரும் வாரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நடத்தவுள்ளனர். இந்த பிரசாரத்தின்போது கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து மக்களுக்கு அவர்கள் தெளிவாக விளக்குவார்கள். அதன்மூலம் தங்களுக்கு சாதகமான சூழல் இத் தொகுதிகளில் உருவாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x