

கோவையில் பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள அஞ்சல் பெட்டிகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய அஞ்சல் துறை கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் தொடர்பு சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டே வரும் இந்த துறையின் கீழ், நாட்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் உள்ளன. அஞ்சல் துறை சார்பில் தற்போதைய நவீன வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வந்தாலும் கடிதப் போக்குவரத்து என்பது தொடக்க காலம் முதல் தற்போது வரை பிரதானமாக உள்ளது.
பொது இடங்கள், தெருக்களின் சந்திப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அஞ்சல் துறையால் வைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகளில் இருந்து பொதுமக்களின் கடிதங்கள் அஞ்சல் ஊழியர்களால் சேகரிக்கப்பட்டு, உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
குறைந்த கட்டணத்தில் நீண்ட தொலைவு ஊர்களுக்கு கடிதங்களை அனுப்ப பொதுமக்கள் நம்பியிருப்பது அஞ்சல் துறையின் கடித சேவையை மட்டுமே என்றுள்ள நிலையில், கோவையில் பொது இடங்களில் இருந்து அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் என்.லோகு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
கோவையில் விமானநிலைய அஞ்சலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதிகளவில் குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட அஞ்சல் பெட்டிகள் இருந்தன. இவற்றால் பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர் பயனடைந்து வந்தனர். கடந்த சில தினங்களில் பெரும்பாலான அஞ்சல்பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன.
இதைப்பற்றி விசாரித்தபோது, கோவை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அஞ்சல் பெட்டிகள் அகற்றப்படுவது தெரிய வந்துள்ளது. அஞ்சல் துறையின் இத்தகைய நடவடிக்கையால் சாதாரண முறையில் கடிதங்கள் அனுப்பும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அஞ்சல் பெட்டிகளை அகற்றி விட்டால், அணுகக்கூடிய இடங்களில் பெட்டிகள் இல்லாமல் பொதுமக்கள் எவ்வாறு கடிதங்களை எளிதாக அனுப்புவார்கள்? தகவல் தொடர்பு வசதி பெருகிவிட்டதால், கடிதங்களை யாரும் அனுப்புவதில்லை என கூற முடியாது. தனியார் கூரியர் நிறுவனங்களில் கடிதப் போக்குவரத்துதான் பிரதானமாக உள்ளது.
அஞ்சல் சேவை மூலமாக ரூ.5 முத்திரைக் கட்டணத்தில் சென்னைக்கு கடிதம் அனுப்ப முடியும். தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்ப வேண்டும் என்றால் ரூ.30 முதல் செலவாகும். அஞ்சல் துறையின் கடிதப் போக்குவரத்து நம்பகத்தன்மை கொண்டது. தனியார் நிறுவனங்கள் அப்படி இல்லை. அதோடு, அஞ்சல் துறையின் இத்தகைய நடவடிக்கை மக்களுக்கு மிகவும் பயனளித்துவரும் சாதாரண கடிதப் போக்குவரத்தை முடக்கும் செயலாகவே பார்க்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து, கோவை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கோபாலனிடம் கேட்ட போது, “கோவையில் அஞ்சல் பெட்டிகள் அகற்றப்படுவது உண்மையே. ஆனால் கடிதப் போக்குவரத்தே இல்லாத பகுதிகளில் இருந்து மட்டுமே அகற்றப்படுகின்றன. குறிப்பாக மின்கம்பங்கள், சாலையோரங்களில் பொது சுவர்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளவை அகற்றப்பட்டு, அதிகம் கடிதப் போக்குவரத்து உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கு வைக்கப்படுகின்றன. கடிதப் போக்குவரத்தை முடக்கும் செயல் இல்லை. ஏதேனும் அதிக கடிதப் போக்குவரத்து உள்ள இடங்களில் இருந்து பெட்டிகள் அகற்றப்பட்டிருந்தாலும், புதிதாக அஞ்சல் பெட்டிகள் வைக்கும் தேவை இருந்தாலும் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.