

சென்னை அப்போலோ குழந் தைகள் மருத்துவமனையில் இந்தியாவில் முதல் முறையாக ஓமன் நாட்டைச் சேர்ந்த ஒரு வயது குழந்தைக்கு ஒருங்கிணைந்த இதயம் மற்றும் மூச்சுக்குழாய் அறுவைச் சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் ஈசா சாலிம் சலீம் அல் ருகாய்ஷி. ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ருகையா. இவர்களின் ஒரு வயது ஆண் குழந்தை யாசின். டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட யாசின் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தான்.
இதையடுத்து கடந்த மாதம் அங்குள்ள மருத்துவமனையில் யாசினை சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தைக்கு பிறவிலேயே இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதும், மூச்சுக்குழாய் சுருங்கி இருப்பதும் தெரியவந்தது. குழந்தையை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செயற்கை சுவாசத்தில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, குழந் தையை காப்பாற்றிவிடலாம் என்று தெரிவித்தனர். குழந்தை யின் இரண்டு பிரச்சினைகளை யும் ஒரே அறுவைச் சிகிச்சையில் சரிசெய்ய திட்டமிட்டனர்.
அதன்படி குழந்தைகள் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் நெவில் சாலமன், நெஞ்சக அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜன் சந்தோஷம் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையின் இதயத்தில் இருந்த இரண்டு ஓட்டைகளையும் அடைத்து விட்டு, மூச்சுக்குழாயில் சுருங்கியிருந்த பகுதியை மட்டும் அகற்றிவிட்டு மூச்சுக்குழாயை இணைத்தனர். சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தையை அனுமதித்து டாக் டர்கள் கண்காணித்து வந்தனர். தற்போது குழந்தையின் உடல் நிலை குணமடைந்துள்ளது. எந்த பிரச்சினையும் எல்லாமல் சுவாசிக்கிறது.
இதுதொடர்பாக டாக்டர்கள் நெவில் சாலமன், ராஜன் சந்தோஷம் ஆகியோர் கூறும்போது, “இந்தியாவில் முதல் முறையாக ஒரு வயது குழந்தைக்கு ஒருங்கிணைந்த இதயம் மற்றும் மூச்சுக்குழாய் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தை தற்போது நலமாக இருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லாமல் தானாகவே சுவாசிக்கிறது. வரும் 18-ம் தேதி மருத்துவமனையில் இருந்து குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.