

தனித்துப் போட்டி என்ற விஜயகாந்தின் முடிவால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்போம் என திமுக தேர்தல் பணிக் குழு தலைவர் எல்.கணேசன் தெரிவித்தார்.
‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டியில் “திமுக அதிமுக இடையேதான் போட்டி ஜெயலலிதா மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வெற்றியைத் தீர்மானிக்கும் 35 சதவீத நடுநிலை வாக்காளர்களில் பெருவாரியானவர்கள் திமுக-வுக்கு ஆதரவாக இருப்பதால் அரியணை எங்களுக்குத்தான். ஜெயலலிதா, ’மைனாரிட்டி திமுக அரசு’ என்று சொல்லி சந்தோஷப்பட முடியாத அளவுக்கு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் அமைப்போம்.
ஆளும் கட்சி மீது அதிருப்தி இருந்தாலும் திமுக மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லையே?
’’ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் திமுக-வுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக அதிமுக பரப்பிவிட்ட வதந்தி இது. வைகோ தலைமையிலான நால்வர் அணியை களமிறக்கியதே ஜெயலலிதாதான். ஆனால், அதிமுக அதிருப்தி ஓட்டுகளால் திமுக அமோக வெற்றி பெறப்போகிறது என்பதுதான் நிஜம்.’’
அப்படியானால் தேர்தலுக்குப் பிறகு உங்கள் முன்னாள் சிஷ்யர் வைகோவின் நிலை?
’’எழுபது வயதைக் கடந்த பிறகும் சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுக்கும் தலைவராகவே இருக்கிறார் வைகோ. அவரை நம்பி இம்முறை கம்யூனிஸ்ட்களும் சேர்ந்துள்ளனர். இப்போதில்லை.. கடைசிவரை லெட்டர் பேடில் மட்டுமே தலைவராக இருப்பார் வைகோ.’’
திமுக தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டாரே விஜயகாந்த்?
“முன்பிருந்த செல்வாக்கு தேமுதிக-வுக்கு இப்போது இல்லை என்றாலும் அந்தக் கட்சிக்கும் ஓரளவுக்கு ஓட்டு இருக்கிறது. அது அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் என்பதால் தேமுதிக-வும் கூட்டணிக்கு வந்தால் அதிமுக-வை அசுர பலத்துடன் வீழ்த்தலாம் என நாங்கள் நினைத்தோம். ஆனால், விஜயகாந்த் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார். இதனால் திமுக-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விஜயகாந்த்தான் பாதிக்கப்பட்டு நிற்கப் போகிறார். இந்தத் தேர்தலில் அவர் இன்னொரு வைகோ ஆகப்போகிறார்.’’